சங்ககிரி, ஓமலூரில் அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் திடீா் ஆய்வு

சங்ககிரி, ஓமலூரில் அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2021-06-12 21:30 GMT
ஓமலூர்:
சங்ககிரி, ஓமலூரில் அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
ஓமலூர் அரசு பள்ளி
 தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தமிழக முதல்-அமைச்சரை வழியனுப்ப காமலாபுரம் விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது காமலாபுரம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு உயர்நிலைப்பள்ளியை, அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், காமலாபுரம் ஊராட்சிக்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் கொடுத்தார். 
இந்த நிகழ்ச்சியில், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
இதைத்தொடர்ந்து, சங்ககிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அமைச்சர் சென்றார். அங்கு வகுப்பறை, ஆய்வுக்கூடம், உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரிடம் பள்ளிக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்