மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த குரங்கு-தண்ணீரை குடித்த 100 பேர் பாதிப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குரங்கு ஒன்று இறந்து கிடந்தது. அந்த தண்ணீரை குடித்த 100 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்பட்ட தண்ணீரை கிராமமக்கள் குடித்தபோது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, கிராமமக்கள் தொட்டியில் ஏறி பார்த்தபோது, அதில் குரங்கு ஒன்று இறந்து, அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தொட்டியின் மேல் பகுதியில் இரும்பு கதவு வைத்து அடைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சுகாதாரமற்ற (குரங்கு இறந்த) தண்ணீரை குடித்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்ம காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.