அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்-இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்

தர்மபுரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக பொதுமக்கள் குவிந்தனர். தடுப்பூசி இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-06-12 20:41 GMT
மொரப்பூர்:
கொரோனா தடுப்பூசி 
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனோ தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதையடுத்து மொரப்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதையடுத்து  மொரப்பூர், சென்னம்பட்டி, வகுத்தானூர், தொப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, எலவடை, சாமண்டஅள்ளி, தொட்டம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை  சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். 
ஆனால் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வந்துள்ளதால் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. அதற்கு பின்னர் வந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்பினர். இதனால் காலையில் இருந்து வெயிலில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி போடாததால்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனால் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே வந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். 80 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வந்திருந்த நிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு குவிந்தனர்.  
பொதுமக்கள் அதிகம் கூடியதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. சிலருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடத்தூர்
கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நேற்று காலை தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்காக எராளமானோர் வந்திருந்தனர். குறைவான தடுப்பூசிகளே இருந்ததால் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்தப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

மேலும் செய்திகள்