கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.
கிருஷ்ணகிரி:
மருந்து தட்டுப்பாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் தாக்கம் கிருஷ்ணகிரியிலும் எதிரொலித்ததால், மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழக அரசின் மூலம் தடுப்பூசிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. பின்னர் அவை மாவட்டம் முழுவதும் உள்ள 61 இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இதையடுத்து தடுப்பூசி போடும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. காலை முதலே, மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மீண்டும் தொடக்கம்
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், சூளகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 6 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. இதனை செலுத்தி கொள்வதற்காக பல இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் குவிந்தனர்.
இதனால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஒவ்வொரு மையத்திற்கும் 100 முதல் 500 டோஸ்கள் வரை மட்டுமே மருந்துகள் அனுப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களை மறுநாள் வருமாறு கூறி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.