பைனான்சியரை மிரட்டி நகை கொள்ளை: பெண் உள்பட 5 பேர் கைது-3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பைனான்சியரை மிரட்டி நகை கொள்ளையடித்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
பைனான்சியரை மிரட்டி கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில்நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற அருள்வாணன் (வயது 48). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த முருகனை 3 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் 9 பவுன் நகைகள், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கெலங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
கைது
விசாரணையில் கர்நாடக மாநில கோணப்ப அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த திவ்யா (35) என்ற பெண்ணுடன் முருகனுக்கு பழக்கம் இருந்ததும், திவ்யாவின் திட்டப்படி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் திவ்யா கெலமங்கலம் செந்தில்நகரை சேர்ந்த அந்தோணி (33), வெங்கடேஷ் (25), கர்நாடக மாநிலம் ஏர்போர்ட் மாரதஅள்ளி ராஜா (27), மாருதிநகர் மஞ்சுநாத் (27) மற்றும் 3 பேர் உதவியுடன் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் திவ்யா உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளையர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.