குமாரபாளையத்தில் காரில் சென்ற இளம்பெண் மர்மசாவு கணவரிடம் போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் காரில் சென்ற இளம்பெண் மர்மசாவு கணவரிடம் போலீசார் விசாரணை;

Update: 2021-06-12 20:40 GMT
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் காரில் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 30). இவர் அங்கு போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அறிவழகன் என்பவரது மகள் தரணி தேவிக்கும் (25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் சுகின் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் சபரிநாதன் மனைவி, மகனை அழைத்து கொண்டு ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு காரில் சென்றார். 
பின்னர் மகன் சுகினை மாமனார் வீட்டில் விட்டு விட்டு சபரிநாதன், மனைவி தரணி தேவி நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூரில் இருந்து காரில் அந்தியூருக்கு புறப்பட்டனர். இதையடுத்து மாலை 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் பகுதியில் வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக சபரிநாதன் காரை நிறுத்தினார். பின்னர் சிறுநீர் கழித்துவிட்டு வந்து பார்த்தபோது தரணி தேவி மயங்கி கிடந்தாராம்.
துருவி துருவி விசாரணை
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சபரிநாதன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு மனைவியை கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தாக்கூர் கோட்டைமேடு பகுதிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மனைவி சாவு குறித்து சபரிநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியதால் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
=======

மேலும் செய்திகள்