டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.;
மேட்டூர்:
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
மேட்டூர் அணை திறப்பு
தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதாவது, டெல்டா பாசனத்திற்கு அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ, பின்னரோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதன்பேரில், மேட்டூர் அணையில் நடப்பாண்டு 96 அடிக்கு மேல் நீர் இருப்பு இருப்பதால் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசை பட்டனை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.
மலர்கள் தூவி வரவேற்பு
பின்னர் அணையின் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மு.க.ஸ்டாலின் மலர்களையும், நெல் உள்ளிட்ட தானியங்களையும் தூவி வரவேற்றார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அவர்களும் தண்ணீரில் மலர்களை தூவி வணங்கினர். நேற்று முதலில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
18-வது ஆண்டாக...
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாக இதுவரை 11 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குறிப்பிட்ட நாளான ஜூன் மாதம் 12-ந் தேதியில் (இந்தாண்டு சேர்த்து) 18-வது ஆண்டாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க 59 ஆண்டுகள் காலதாமதமாக அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தாண்டில் குறித்த நாளான நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
10 ஆயிரம் கனஅடி
மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை வரை செல்லும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் 647 நீர் ஆதாரங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த மாதம் இறுதி வரையில் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்பிறகு அடுத்த மாதம் (ஜூலை) வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும். ஆகஸ்டு மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக நீர் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன். கவுதம சிகாமணி, செந்தில்குமார், சின்ராஜ், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணை வரலாற்றில் இடம்பிடித்த ஸ்டான்லியும்... ஸ்டாலினும்...
தமிழக மக்களின் நலனுக்காக ஆங்கிலேயர்களால் மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணி 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த அணையில் 120 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி). மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்பு முதன் முறையாக 1934-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பெட்ரிக் ஸ்டான்லி முதன்முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்து வைத்தார். இவரது நினைவாக மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என பெயரிடப்பட்டது. கால வழக்கில் மேட்டூர் அணை என அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டு மேட்டூர் அணை என்ற பெயரே நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீர்ப்பாசனம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி கொரோனா தொற்று காலத்திலும் மேட்டூர் அணைக்கு நேரடியாக வந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் குறித்த தேதியான ஜூன் மாதம் 12-ந்் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் 87 ஆண்டுகளுக்கு முன்பு கவர்னர் ஸ்டான்லியும், அதன்பிறகு மேட்டூர் அணையில் இருந்து தற்போது முதல்-அமைச்சர் ஸ்டாலினும் குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் அணையை நேரில் வந்து திறந்து வைத்த முதலாவது முதல்-அமைச்சர் என்ற பெருமையையும் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார்.