சேலம் அருகே, பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து தனியார் பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்து படுகொலை கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
சேலம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து தனியார் பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:
சேலம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து தனியார் பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் பஸ் கண்டக்டர்
சேலம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார். இவருக்கும், மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் ஆன ஒரு ஆண்டிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
சேலம் இரும்பாலை ரோடு பால் பண்ணை அருகில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருடைய இளைய மகள் சர்வேஸ்வரியை சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சர்வேஸ்வரி தனது கணவரை பிரிந்து வந்து தாயாருடன் வசித்து வருகிறார்.
கள்ளக்காதல்
இதற்கிடையில் சுப்பிரமணி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அங்கு அவர் சித்ராவின் மகள் சர்வேஸ்வரியை பார்த்துள்ளார். இதையடுத்து அவருக்கும், சுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்தனர்.
இதற்கிடையில் சித்ராவின் மூத்த மகளான உமாமகேஸ்வரி (35) விழுப்புரத்தில் கணவருடன் வாழ்ந்து வந்தார். அவரும் குடும்ப தகராறு காரணமாக கணவருடன் கோபித்து கொண்டு சேலத்துக்கு வந்து தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரை பார்த்த சுப்பிரமணி அவருடைய அழகிலும் மயங்கினார். இதையடுத்து அவருடன் நைசாகி பேசி தொடர்பை ஏற்படுத்தினார்.
கழுத்தை நெரித்து கொலை
உமா மகேஸ்வரி கேட்டதை எல்லாம் சுப்பிரமணி வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்கள் நெருங்கி பழகினர். இதனால் அவர்களுக்கு இடையேயும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த சுப்பிரமணியின் வீட்டுக்கு உமா மகேஸ்வரி அடிக்கடி சென்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்தது கண்டக்டருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் உமா மகேஸ்வரியை கண்டித்தார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பரபரப்பு தகவல்கள்
பின்னர் சுப்பிரமணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது சுப்பிரமணி வீட்டுக்கு உமா மகேஸ்வரி மற்றும் 2 ஆண்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலி உமா மகேஸ்வரியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
தளவாய்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சுப்பிரமணிக்கும், உமா மகேஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன்பிறகு தான் உமா மகேஸ்வரிக்கு ஏற்கனவே தளவாய்பட்டியை சேர்ந்த கண்ணன் (46), செங்கானூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (38) ஆகியோருடன் தொடர்பு இருந்தது சுப்பிரமணிக்கு தெரியவந்தது.
திட்டம் தீட்டினர்
அதைத்தொடர்ந்து சுப்பிரமணி, உமா மகேஸ்வரியை கண்டித்தார். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. சுப்பிரமணியின் கண்டிப்பு எல்லை மீறுவதாலும், உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாலும் அவரை கொலை செய்ய உமா மகேஸ்வரி, கண்ணன், நாகராஜன் ஆகியோர் திட்டம் தீட்டினர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியின் வீட்டுக்கு உமா மகேஸ்வரி வந்தார். பின்னர் அவர் சுப்பிரமணிக்கு சாத்துக்குடி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன், நாகராஜனுடன் சேர்ந்து உமா மகேஸ்வரி, கண்டக்டர் சுப்பிரமணியை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். மேலும் ஆண் உறுப்பையும் நசுக்கி விட்டனர்.
இந்த தகவலை உமா மகேஸ்வரி போலீசார் விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உமா மகேஸ்வரி, கண்ணன், நாகராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.