மூதாட்டியிடம் 6 பவுன் நகை நூதன முறையில் மோசடி

விருதுநகரில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை மோசடி செய்யப்பட்டது.

Update: 2021-06-12 19:58 GMT
விருதுநகர், 
விருதுநகர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 65). இவரது மகன் சென்னை ெரயில்வே போலீசில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை ராமலட்சுமி இந்நகர் ெரயில்வே பீடர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது முக கவசம் அணிந்து வந்த ஒரு வாலிபர் மோட்டர் சைக்கிளில் வந்து மூதாட்டியிடம் அவரது மகனின் நண்பர் என அறிமுகம் செய்து கொண்ட பின்னர் ராமலட்சுமியிடம் உங்களது மகனுக்கு வங்கியில் ரூ.75ஆயிரம் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உங்களது மகன் கடன் தொகையை பெற்று உங்களிடம் தருமாறு சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  ராமலட்சுமி அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சூலக்கரை அருகே சென்றதும் அங்கு இறங்கி மூதாட்டியிடம் தங்க நகை அணிந்து வந்தால் வங்கியில் கடன் தர யோசிப்பார்கள் என்றுகூறி நகைகளை கழற்றிதருமாறு கூறியுள்ளார். ராமலட்சுமியும் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். கையில் கிடந்த தங்க வளையலை கழற்ற முடியாத நிலையில் அந்த வாலிபரே மூதாட்டியின் கையில் கிடந்த தங்கவளையல்களை மிகுந்த சிரமப்பட்டு கழற்றி எடுத்துள்ளார். பின்னர் ராமலட்சுமியை அங்கே இருக்குமாறு சொல்லிவிட்டு தான் வங்கிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ராமலட்சுமி தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். மூதாட்டி பறி கொடுத்த நகைகள் 6 பவுன் ஆகும். இதுகுறித்து நகர் மேற்கு போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ராமலட்சுமியை அந்த வாலிபர் சந்தித்த இடத்தில் உள்ள விடுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நூதன முறையில் நகைகளை மோசடி செய்த அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்