இந்தியா முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்தியா முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி பேட்டி
சோளிங்கர்
சோளிங்கர் தொகுதி முனிரத்தினம் எம்.எல்.ஏ.வின் மனைவி கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதைத்தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஆகியோர் சோளிங்கரில் கலைவாணியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் வரி என கலால் வரியை மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி வசூல் செய்துள்ளது.
முகலாயர் ஆட்சி காலத்தில் 6 பங்கு நிலத்தில் விளைச்சல் விளைந்தால் ஒரு பங்கு ஆட்சியாளருக்கு தரவேண்டுமென உத்தரவு இருந்தது. ஆனால் தற்பொழுது உள்ள மோடி அரசானது ஆறு பங்கு விளைச்சல் விளைந்தால் அந்த ஆறு பங்கையும் வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதால், இந்தியா முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது 30 நாள் தி.மு.க. ஆட்சி என்பது, கைக்குழந்தை போன்றது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் செய்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை அளிக்கிறது. தமிழகத்தில் கட்டாயமாக நீட் தேர்வு என்பது நடைபெறாத வண்ணம் தி.மு.க. அரசு பார்த்துக்கொள்ளும். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மோடி அரசுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.