மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 100 பேருக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பு இருந்தே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறார். முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் ஏற்படாதவாறு வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கொண்டு வந்தும், தமிழகத்தில் உற்பத்தியை அதிகரித்தும் தீர்த்து வைத்தார். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தொற்று குறைந்தாலும், நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்புத்தொகையும், 18 வயது வரை படிப்பு செலவு அனைத்தையும் அரசு ஏற்கும் எனவும், குழந்தைகளின் காப்பாளருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருநங்கைகளுக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன்கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக நலத்துறை மூலம் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் நமது மாவட்டத்தில் விரைந்து குறைந்து வந்தாலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொரோனா இல்லாத நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் பிச்சை, உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் பாலசுந்தரம், சாமதுரை, மல்லிகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.