குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்தவர் மார்ஷல் நேசமணி
மார்ஷல் நேசமணியின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்தவர் மார்ஷல் நேசமணி என்று புகழாரம் சூட்டினார்.
நாகர்கோவில்:
மார்ஷல் நேசமணியின் 127 - வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்தவர் மார்ஷல் நேசமணி என்று புகழாரம் சூட்டினார்.
நேசமணி பிறந்தநாள் விழா
குமரி தந்தை என்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 127 - வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாய் தமிழகத்துடன்இணைந்தது
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 1895-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி பள்ளியாடியை அடுத்த நட்டாலம் அருகில் உள்ள நேசர்புரம் எனும் கிராமத்தில் அப்பல்லோஸ்-ஞானம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார். இவர் தமிழ்ப்பகுதிகள் தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முழங்கினார். இதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு 1956 -ம் ஆண்டு நவம்பர் 1 -ந் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்தது. இவ்வாறு குமரி மாவட்டம் தோன்றியதற்கு, முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி. எனவே குமரி தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி, மார்ஷல் என அனைத்து மக்களால் புகழப்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மார்ஷல் நேசமணியின் மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு கட்சியின் மண்டலத் தலைவர் அன்பு கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தங்கவேல், ராஜு, அனீஸ், மரிய ராஜன், சாலமன் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.