வெளிமாநிலங்களில் தேவை அதிகரிப்பால் இளநீர் விலை உயர்வு

வெளிமாநிலங்களில் தேவை அதிகரித்து உள்ளதாலும், இளநீர் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update: 2021-06-12 17:45 GMT
பொள்ளாச்சி

வெளிமாநிலங்களில் தேவை அதிகரித்து உள்ளதாலும், இளநீர் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இளநீர்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து இளநீர் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் இளநீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையில் தேவை அதிகரித்தும், வரத்து இல்லாததால் இளநீர் விலை அதிகரித்து உள்ளது. தோட்டங்களில் ஒரு இளநீர் ரூ.30 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

தேவை அதிகரிப்பு

பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதிகளில் இருந்து சென்னை, மதுரை, தூத்துக்குடி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் முதலில் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரேதம், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இளநீர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

வழக்கமாக அக்டோபர் முதல் ஜனவரி வரை இளநீர் வரத்து அதிகமாக இருக்கும். அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக இளநீர் வரத்து குறைய தொடங்கும். வரத்து அதிகமாக உள்ள காலங்களில் தினமும் 3½ லட்சம் இளநீர் ஏற்றுமதி செய்யப்படும். 

தற்போது 1½ லட்சம் இளநீர் தான் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் தேவை அதிகமாக இருந்தும், வரத்து குறைவு காரணமாக கூடுதலாக இளநீரை அனுப்ப முடியவில்லை.

விலை அதிகரிக்க வாய்ப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்ற லாரிகள் வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் தோட்டங்களில் இளநீர் தேக்கம் அடைந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் இளநீர் ஏற்றுமதி தொடங்கி உள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு வெட்டிய இளநீரை முன்கூட்டியே வெட்டி எடுத்து செல்ல வேண்டிய உள்ளது. இதனால் இளநீரின் சுவை குறையாது.
எடை மட்டும் சற்று குறைவாக இருக்கும். முதல் தரம் இளநீர் ரூ.29 முதல் ரூ.30 வரைக்கும், 2-ம் தர இளநீர் ரூ.27 முதல் ரூ.28 வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இளநீரின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இளநீரின் விலை அதிகரிக்கும். எனவே விவசாயிகள் யாரும் குறைந்த விலைக்கு இளநீரை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்