சோலையார் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது
வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது.;
வால்பாறை
வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது.
பலத்த மழை
கேரளாவில் கடந்த 3-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் கேரள எல்லையோரத்தில் உள்ள வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வபோது வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றன. மேலும் கடைவீதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகள் பிடித்தப்படி சென்றனர்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி மாணவிகள் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தபடி வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.
சோலையார் அணை
வால்பாறை பகுதியில் தொடர்மழையின் காரணமாக பரம்பிக்குளம், ஆழியார் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணை நேற்று காலை 6 மணி நிலவரப்படி 50 அடியை தாண்டியது.
அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியதை தொடர்ந்து சோலையார் மின்நிலையம்-1 இயக்கப்பட்டது. இதன் மூலம் மின் உற்பத்திக்கு பின்னர் பரம்பிக்குளம் அணைக்கு 310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.