பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆதிவாசி மக்களுக்கு நிவாரண பொருட்கள்
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆதிவாசி மக்களுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
இடிகரை
பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலமலை மலை பகுதியில் பெரும்பதி, பெருக்கும்பதி, குஞ்சூர்பதி, மாங்குழி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 140-க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஆதிவாசி மக்கள் மலைப்பகுதியை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு போலீசார் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு, ஆதிவாசி மக்களுக்கு 10 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.