இங்கிலாந்தை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் தூத்துக்குடியில் பிடிபட்டது எப்படி?
இலங்கைக்கு செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் தூத்துக்குடியில் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் தோர்ன் (வயது 47) என்பவர் தூத்துக்குடியில் தங்கி இருந்தார். அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்வதற்காக, தூத்துக்குடி கடற்கரையில் சுற்றிக்கொண்டு இருந்தபோது கியூபிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் வைத்து இருந்தார். அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீவிர விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜகுமரேசன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோனதன் தோர்ன் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக போலீசார் ஜோனதன் தோர்னிடம் நடத்திய விசாரணையில், அவர் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து உள்ளார். அந்த வழக்கு தற்போது கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரரான ஜோனதன் தோர்ன் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்று உள்ளார்.
இதற்காக இலங்கையை சேர்ந்த ஒருவரை ஜோனதன் தோர்ன் தொடர்பு கொண்டார். அவர் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதற்கான விலையும் பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஜோனதன் தோர்ன் தூத்துக்குடியில் வந்து தங்கி உள்ளார். பின்னர் கடற்கரைக்கு சென்று காத்திருந்தபோது போலீசில் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.
மேலும் கியூ பிரிவு போலீசார், ஜோனதன் தோர்ன் தங்கி இருந்தபோது யாரேனும் அவரை சந்தித்து உள்ளார்களா? என்பதை அறிவதற்காக அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் யாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்? யாருடைய படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றார்? என்பன உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அவரது உயர்ரக செல்போனை திறக்க முடியாததால், அதில் உள்ள தகவல்களை பெற முடியவில்லை. அந்த செல்போனை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவர் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டுக்கு செல்லவில்லை. இதனால் பாஸ்போர்ட் முறையாக புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? அதில் வேறு ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா? என்பது குறித்தும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், உள்ளூர் விமான நிலையத்துக்கு அதுபோன்ற எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதனால் சென்னை கியூ பிரிவு போலீசார் மூலம் தூதரகத்தில் தகவல்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே கடத்தப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக ஆட்களை ஏற்றி செல்லும் நிலையும் உருவாகி உள்ளது. இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கையை சேர்ந்தவர்கள், ஊரடங்கு நேரத்திலும் பல சோதனைச்சாவடியை கடந்து மதுரைக்கு சென்று உள்ளனர். அங்கு வைத்து கியூ பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.