ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் தொடங்கியது
நீலகிரியில் 2-ம் கட்ட கொரோனா நிவாரண தொகை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் தொடங்கியது.
ஊட்டி,
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
இதற்காக சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு மளிகை பொருட்களை பைகளில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை, உளுந்து, கடலை பருப்பு, கடுகு, மிளகாய்த்தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. மளிகை பொருட்கள் தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை பெறுவதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது.
அதில் ரேஷன் கார்டுதாரர் பெயர், நிவாரணத்தொகை வாங்கும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ரேஷன் விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
வருகிற 15-ந் தேதி முதல் தமிழக அரசு அறிவித்த மளிகை பொருட்கள் தொகுப்பு, ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு மாதத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படுகிறது என்றார்.