10 தாலுகாக்களில் ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை இணைய தளம் மூலம் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்

மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் வருகிற 17-ந்தேதி முதல் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-06-12 17:19 GMT
கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜமாபந்தி நடைபெறும் தாலுகா, நடத்தும் அலுவலர்கள் விவரம் வருமாறு:-

குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டர், திட்டக்குடி தாலுகாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர், காட்டுமன்னார்கோவில் தாலுகாவுக்கு சிதம்பரம் சப்-கலெக்டர், விருத்தாசலம் தாலுகாவுக்கு சப்-கலெக்டர், கடலூர் தாலுகாவுக்கு கோட்டாட்சியர், சிதம்பரம் தாலுகாவுக்கு கலால் உதவி ஆணையர், பண்ருட்டி தாலுகாவுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்,
புவனகிரி தாலுகாவுக்கு முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர், வேப்பூர் தாலுகாவுக்கு நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

இணைய தளத்தில் பதிவு

இந்த ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம்) பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெறும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது வருவாய் தீர்வாய கோரிக்கை மனுக்களை http://gdp.tn.gov.in/jamabandhi இணையதளத்தில் கணினி மூலம் அல்லது தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் மூலமாக வருகிற 10-ந்தேதி முதல் 31.7.21-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.

பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பாக, வருவாய் தீர்வாய மனுக்களை இ-சேவை மையத்தில் இணையவழியில் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பதிவு செய்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் விரைவாக உத்தரவு பிறப்பிக்கப்படும். பொதுமக்கள் இணையவழி அல்லது இ- சேவை மையங்கள் மூலம் வருவாய் தீர்வாய மனுக்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்