கொரானா கட்டுப்பாடு விதிகளால் தடை காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்வதில் மீனவர்களிடையே குழப்பம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரோனா கட்டுப்பாடு விதிகளால் தடைகாலம் முடிவடைந்தும், மீன்பிடிக்க செல்வதில் மீனவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-06-12 17:09 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரை கோரி, சோனங்குப்பம், ராசா பேட்டை, சித்திரை பேட்டை, உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை, 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருந்து வருகிறது.

தற்போது இந்த தடைகாலமானது நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகள், வலைகளை, சீரமைப்பு பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர். 


கட்டுப்பாடுகள்

இதற்கிடையே தற்போது உள்ள கொரானா கட்டுப்பாடு விதிகளின்படி மீனவர்கள் வலைகளில் பிடித்து வரப்படும் மீன்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யக்கூடாது என்றும் மொத்த வியாபாரியிடம் மட்டும் விற்பனை செய்யவேண்டும், 

மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள் என்றும், சில்லறை வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள் மீன்களை, தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் செல்ல வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் மீன்பிடி தடைக்காலம் முடிந்த பின்பும், ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வரப்படும் மீன்களை பொது ஏலம் இல்லாமல் விற்றால் தங்களுக்கு உரிய தொகை கிடைக்காது என்பது பெரும்பாலான மீனவர்களின் கருத்தாக உள்ளது. 

இதனால் தற்போது தடைகாலம் முடிந்தவுடன் மீன்பிடிக்க செல்லலாமா? வேண்டாமா? என மீனவர்களிடையே ஒருவித குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். 

பேச்சுவார்த்தை

இது சம்பந்தமாக மீன்வளத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உரிய சுமூக தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இதற்கிடையே ஒரு சில மீனவர்கள் தங்களின் படகுகளை ஐஸ் கட்டிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக கடலூர் துறைமுகத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். 

இதனால் ஒரு சில மீனவர்கள் மட்டும், மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன்( 14-ந் தேதி) முடிந்த உடன், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மீன்பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்