கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அவர்கள் செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-12 16:54 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இருப்பு இல்லாத காரணத்தால், அந்த பணி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் தினமும் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி அங்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

இதற்கிடையில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உடனுக்குடன் தடுப்பூசி செலுத்தி அனுப்பி வைப்பதாக நீண்ட நேரம் காத்திருந்தவர்கள், அங்கு பணியாற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார், தடுப்பூசி செலுத்த வந்தவர்களை சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வைத்தனர். மேலும் செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்தவர்களை சமாதானப்படுத்தினர். அரசு ஆஸ்பத்திரி முதல் பஸ் நிலையம் அருகில் உள்ள நடைபாதை வரை சுமார் 200 மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்