திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 9,500 தடுப்பூசிகள் போடப்பட்டது. கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

Update: 2021-06-12 16:53 GMT
திருப்பத்தூர்

சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசி 8,750, கோவேக்சின் 750 என 9 ஆயிரத்து 500 தடுப்பூசி மருந்துகள் வந்தது.

 அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 45 இடங்களில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

காலை முதலே அனைத்து இடங்களிலும் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.

9,500 தடுப்பூசிகள்

பின்னர் அவர் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.‌ கடந்த 3 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில்தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 9,500 தடுப்பூசிகள் வந்தது. 45 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி  அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டது. ஓரிரு நாட்களில் தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்தார்.
சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்