சாராய ஒழிப்பு பணியில் நேரடியாக களம் இறங்கிய போலீஸ் சூப்பிரண்டு. மோட்டார்சைக்கிளில் சென்று அதிரடி வேட்டை
குடியாத்தம் பகுதியில் சாராய ஒழிப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நேரடியாக களம் இறங்கினார். அவர் மோட்டார்சைக்கிளில் சென்று சாராய ஊறல்களை அழித்தார்.
குடியாத்தம்
போலீஸ் சூப்பிரண்டு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகள் மற்றும் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் அதிரடி சோதனை செய்து சாராய ஊறல்களை அழித்து வந்தனர்.
இந்தநிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நேற்று காலையில் அதிரடியாக அவரே களத்தில் இறங்கினார். குடியாத்தத்தை11 அடுத்த அக்ராவரம் பூங்குளம் மலைப்பகுதி மற்றும் ஏரிப்பட்டரை ஆகிய இடங்களில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் போலீஸ் படையுடன் சென்றார்.
மோட்டார்சைக்கிளில்
போலீஸ் வாகனம் செல்ல முடியாத பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சாராயம் காய்ச்சப்படும் இடத்திற்கு சென்று அதிரடி சாராய ஊறல் அழிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வெல்லம் தயாரிக்கும் கொப்பரையில் இருந்த சாராய ஊறல்களையும், தொடர்ந்து பல இடங்களில் சாராய ஊறல்களையும் அழித்தார். சுமார் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
இந்த அதிரடி சோதனையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், வெங்கடேசன், காவலர்கள் வினோத் குமார், மஞ்சுநாத், பிரேம் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சாராயம் காய்ச்சும் முக்கிய நபர்களான முருகன் மற்றும் சம்பட்டி சரவணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.