வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வருகை
வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வருகை;
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
குறைவான தடுப்பூசி மருந்து வருகை காரணமாக கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தன. நேற்று அதிகாலை 3 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்தன. அவை உடனடியாக ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.