தூர்வாரும் பணிக்காக தேனி ராஜவாய்க்காலில் அதிகாரிகள் குழு ஆய்வு
தேனி நகரில் நீண்டகால பிரச்சினையாக உள்ள ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேனி:
தேனி நகரில் நீண்டகால பிரச்சினையாக உள்ள ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேனி ராஜவாய்க்கால்
தேனி கொட்டக்குடி ஆற்றில், தேனி பள்ளிவாசல் தெரு அருகே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் உள்ள மதகில் இருந்து தொடங்கும் ராஜவாய்க்கால் பங்களாமேடு வழியாக சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாய் வரை அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த வாய்க்கால் மூலம் நேரடி பாசனமாக 222.27 ஏக்கர் நிலங்களும், தாமரைக்குளம் கண்மாய் மூலம் 111.54 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்றன. வாய்க்கால் தூர்வாரப்படாததால் தூர்ந்து போனது. வாய்க்காலை நம்பி இருந்த விவசாய நிலங்களும் குடியிருப்புகளாக மாறிவிட்டன. வாய்க்கால் தூர்ந்து போனதால், தேனியில் மழை பெய்யும் நாட்களில் மழைநீர் கடந்து செல்ல வழியின்றி வாய்க்கால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கலெக்டர் ஆலோசனை
இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று நீண்ட காலமாகவே மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் போதும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வார தேவையான நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தி, அரசு துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மேலும், இந்த வாய்க்காலை தூர்வாரும் பணிகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு தூர்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஆய்வு
அதன்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) தியாகராஜன் தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் நேற்று இந்த வாய்க்கால் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாய்க்கால் தொடங்கும் இடத்தில் இருந்து கண்மாய் வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்த அறிக்கை கலெக்டருக்கு அளிக்கப்படும் என்று ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரம், தாசில்தார் தேவதாஸ், நகராட்சி ஆணையாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலை தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால், சில நாட்களில் அந்த பணி கைவிடப்பட்டது. எனவே, இந்த முறையாவது மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.