பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு
61 நாள் தடை காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால் பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
61 நாள் தடை காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால் பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.
மீன்பிடி தடைகாலம்
தமிழக கடல் பகுதிகளில் இந்த ஆண்டின் 61 நாள் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி அன்று தொடங்கியது. தடை காலத்தை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்தக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தடை காலத்தில் மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணியில் ஈடுபட்டனர்..
இந்த நிலையில் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி தடை காலம் நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிவடை கிறது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். பாம்பன் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் நாளை மறுநாள் (15-ந் தேதி) முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதற்காக கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள பல விசைப் படகுகளை மராமத்து பணிகள் செய்து கடலில் வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.
காற்றின் வேகம்
இதுகுறித்து பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி பேட்ரிக் கூறியதாவது:- பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காற்றின் வேகத்தை கண்காணித்து கடலுக்கு மீன்பிடிக்க செல்வது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:- கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணத்தால் மீனவர்களின் உயிர் நலனை கருத்தில் கொண்டு ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களில் உள்ள விசைப்படகு மீனவர்களும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல அரசு உத்தரவிட வேண்டும். அனைத்து மீனவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்து வதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்யவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.