தடுப்பூசி போட்டுக்கொள்ள அலைமோதிய மக்கள் கூட்டம்

திண்டுக்கல்லில் ஒரு வாரத்துக்கு பிறகு நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கூட்டத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டதுடன் தடுக்க வந்த போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2021-06-12 14:50 GMT
திண்டுக்கல்:

கொரோனா தடுப்பூசி
 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகின்றன. 

முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. 

அதன் பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர்.

இதன் காரணமாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சுகாதாரத்துறையினரிடம் தடுப்பூசிகள் இருப்பு இல்லாமலேயே போனது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. 

இதனை அறியாமல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை பார்க்க முடிந்தது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு எப்போது தடுப்பூசி வருமோ? என்ற ஏக்கத்தில் வழிமேல் விழி வைத்து பொதுமக்கள் காத்திருந்தனர்.

9 ஆயிரம் டோஸ்

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நேற்று முதல் நடத்தப்பட்டது. 

திண்டுக்கல்லில், அரசு மருத்துவமனை, கமலா நேரு அரசு மருத்துவமனை, மரியநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

‘கோவேக்சின், கோவிஷீல்டு’ ஆகிய 2 தடுப்பூசிகளும் போடப்பட்டன. இதில் சில இடங்களில் 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது. சிறப்பு முகாம் நடப்பது குறித்து தகவலறிந்ததும் அரசு மருத்துவமனை, தனியார் திருமண மண்டபங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

விவேகானந்தர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நேற்று காலை 7 மணி முதலே நீண்ட வரிசை காணப்பட்டது. அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கமாகவே நின்றனர்.

தள்ளு, முள்ளு

 மருத்துவ குழுவினர் காலை 9 மணிக்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். அப்போது அங்கு காத்திருந்த பொதுமக்கள் எங்கே தடுப்பூசி தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற பதற்றத்தில் முண்டியடித்துக்கொண்டு மண்டபத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

 இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் போலீசார் வயது அடிப்படையில் பொதுமக்களை வரிசைப்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மண்டபத்துக்குள் செல்ல அனுமதித்தனர். 

ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்து டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே தனியார் திருமண மண்டபங்களில் நடந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. 

டோக்கன் பெறாமல் தடுப்பூசி போட வந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

---------
ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்
கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றாலே, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முதலில் செல்வது திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தான். ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிவதால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியாகிறது. 

கொரோனா பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளை தவிர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போடப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளாததாலேயே அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர். 

எனவே மாவட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடக்கும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்