படிப்பு செலவுக்காக சேமித்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமி - மாற்றுத்திறனாளியான தாயாரும் 2 மாத உதவி தொகையை வழங்கினார்

நாகை அருகே படிப்பு செலவுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை சிறுமி ஒருவர் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளியான அவருடைய தாயாரும் தனது 2 மாத உதவி தொகையையும் வழங்கினார்.;

Update:2021-06-12 18:37 IST
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த முட்டத்தை சேர்ந்தவர் அருள். சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா(வயது35).மாற்றுத்திறனாளி. இவர்களுடைய மகள் பிருந்தா(10), அப்பகுதியில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பிருந்தா, தனது படிப்பு செலவுக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்து தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகளின் விருப்பத்தை, அவர் பயின்று வரும் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளி ஆசிரியர்கள், பிருந்தா மற்றும் அவரது பெற்றோரை நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் கலெக்டர் பிரவீன் நாயரிடம், உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.2,195-யை கொரோனா நிவாரண நிதிக்காக பிருந்தா வழங்கினார்.

மேலும் சித்ரா தனக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் மாற்றுத்திறனாளிக்கான இரண்டு மாத உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தையும் கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டரிடம் வழங்கினார். உண்டியல் சேமித்த பணத்தை வழங்கிய அரசு பள்ளி மாணவி பிருந்தாவை கலெக்டர் பிரவீன் நாயர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

மேலும் செய்திகள்