செப்டம்பர் 15-ந்தேதி முதல் காஞ்சீபுரம் பட்டுப்பூங்கா செயல்பட நடவடிக்கை அமைச்சர் தகவல்

காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் செயல்பட நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2021-06-12 02:55 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்க்கதிர்ப்பூரில் அமைக்கப்பட்டு வரும் பட்டுப்பூங்காவை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் பட்டுப்பூங்காவை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டமும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:-

காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்ப்பூரில் 75 ஏக்கர் பரப்பளவில் 102 கோடியே 83 லட்சம் மதிப்பில் பட்டுப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் கைத்தறி நெசவு, பட்டு சாயமிடல், தோய்ச்சல், எம்பிராய்டரி மற்றும் கார்மென்டிங் ஆகிய இனங்களில் 82 தொழில்கூடங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த பூங்காவின் மூலம் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சாயமிடுபவர்கள் மற்றும் கைத்தறி மதிப்பு இணைப்பில் தொடர்புடைய 18 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த பூங்காவின் இன்றைய நிலை குறித்து அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து இருக்கிறோம். பல ஆண்டுகளாக இந்த பூங்கா செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

இந்த பூங்காலை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த பட்டுப்பூங்கா குறித்து நேரில் ஆய்வு செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு் கொண்டதற்கிணங்க ஆய்வு செய்து நிலைமையை அறிந்து கொண்டோம். அண்ணாவின் பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் காஞ்சீபுரத்தில் பட்டுப்பூங்கா முதற்கட்டமாக 25 சதவீத பணிகளுடன் தொடங்கப்படும். தொடர்ந்து பணிகள் கண்காணிக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, ஆணையாளர் பீலாராஜேஷ், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், கைத்தறித்துறை கூடுதல் இயக்குனர் கர்ணன், துணை இயக்குனர் கணேசன், காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், எழிலரசன், தி.மு.க. நிர்வாகிகள் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தி.அன்பழகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்