14 மளிகை பொருட்கள், ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை பெறுவதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
நிவாரணத்தொகை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு பொது வினியோக திட்டத்தில் அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
கடந்த 3-ம் தேதி சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் 11 முதல் 14-ந் தேதி வரை வீடு, வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்து 15-ந் தேதி முதல் 14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
டோக்கன் வினியோகம்
இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் 1,591 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 49 ஆயிரம் அரிசி அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள். இந்த பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவடைந்து விடும். வருகிற 15-ந் தேதி முதல் ரேஷன் கடைக்கு பொதுமக்கள் வந்து மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோக்கனில் தேதி மற்றும் நேரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிப்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்து சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கி செல்லலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சேலம் மாநகரில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேற்று வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.