விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பணிகள்

பொள்ளாச்சி பகுதியில் விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-11 19:20 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். 

இணை இயக்குனர் ஆய்வு  

மண்ணின் வளத்தை அறிந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும். 

அதன்படி மண்வள இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 6 ஆயிரத்து 600 மண் மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர், நாச்சிபாளையம் மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் மண் மாதிரி சேகரிக்கும் பணிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர்.சித்ராதேவி, துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) புனிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- 

ஈரமான இடத்தில் எடுக்கக்கூடாது 

விவசாயிகள் மண் மாதிரி எடுக்கும்போது வயலின் வரப்பு ஓரங்கள், மர நிழல் பகுதி, ஈரமான இடங்கள் மற்றும் உரம், கம்போஸ்ட் குறைந்த இடங்களில் இருந்து எடுக்க கூடாது. 

ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் ஆங்கில எழுத்து வி வடிவில் குழிகள் எடுக்க வேண்டும். அந்த குழி அரை அடி முதல் முக்கால் அடி ஆழத்திற்கு இருக்க வேண்டும். 

பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்திற்கு சுரண்டி எடுக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை நிழலில் உலர்த்தி கல், வேர் ஆகிய பொருட்களை நீக்க வேண்டும். அதனை தூளாக்கி அரை கிலோ அளவில் மாதிரி சேகரிக்க வேண்டும்.

அதிக மகசூல் 

அதனை துணிப்பையில் சேகரித்து அதில் விவசாயி பெயர், முகவரி, புல எண், பாசன விவரம், பயிர் சாகுபடி விவரம் ஆகியோருடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் இடம் வழங்க வேண்டும். 

பின்னர் மண் பரிசோதனை செய்யப்பட்ட மண் வள அட்டையை பெறலாம். அதன் பின்னர் உரமிட்டு சாகுபடி செய்யும்போது அதிக மகசூல் பெறலாம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்