திருச்சி விமான நிலையம் அருகில் கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை; நண்பர்கள் 4 பேர் கைது
திருச்சி விமான நிலையம் அருகில் கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையம் அருகில் கஞ்சா வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கஞ்சா வியாபாரி
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). பெயிண்டரான இவர் அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாரதிநகரின் பின்பகுதியில் அவர் தலையில் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கொலை
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அருண், அன்று இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த அருண், தனது நண்பர்கள் பிரேம், ஜாகீர், முபாரக், தர்மா ஆகியோருடன் சென்றது தெரியவந்தது.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அருணின் நண்பர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிரேம், ஜாகீர், முபாரக், தர்மா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவா்களிடம் நடத்திய விசாரணையில, போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அருணை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.