குடியாத்தம் அருகே கோவிலில் மர்ம நபர்கள் வைத்துச்சென்ற ஐம்பொன் சிலை
குடியாத்தம் அருகே மர்ம நபர்கள் ஐம்பொன் அம்மன் சிலையை கோவிலில் வைத்து சென்றுள்ளனர். அதை வருவாய்த்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்
ஐம்பொன் அம்மன் சிலை
குடியாத்தத்தை அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. இ ங்கு சுமார் 10 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. பிச்சனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தினமும் காலையும், மாலையும் பூஜை செய்வது வழக்கம்.
கடந்த 4-ந் தேதி காலை கோவிலில் இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த புருஷோத்தமன் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் பூஜை செய்வற்காக கோவிலுக்கு வந்தபோது காளியம்மன் சிலை அருகே சுமார் 1½ அடி உயரம், முக்கால் அடி அகலத்தில் 12 கிலோ ஐம்பொன்னாலான அம்மன் சிலை ஒன்று இருந்தது. யாரோ மர் நபர்கள் அதை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறையினர் விசாரணை
இதனை அடுத்து குடியாத்தம் தாசில்தார் வத்சலாவின் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் உள்ளிட்ட வருவாய் துறையினர் கோவிலுக்கு சென்று அங்கிருந்த சுமார் 12 கிலோ எடை உள்ள ஐம்பொன் அம்மன் சிலையை குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். பின்னர் அந்த அம்மன் சிலை குடியாத்தம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஐம்பொன் அம்மன் சிலையை யார் கொண்டு வந்து வைத்தது என்பது தெரியவில்லை. யாராவது நேர்த்திக் கடனுக்காக ஐம்பொன் சிலையை செய்து இந்த கோவிலில் வைத்து சென்றனரா, அல்லது ஏதாவது கோவிலில் இருந்து திருடி வந்து இந்த கோவிலில் வைத்து விட்டுச் சென்றனர் என்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.