வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட தோல் தொழிற்சாலையில் தீ விபத்து.வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட தோல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.;

Update: 2021-06-11 17:50 GMT
வாணியம்பாடி
தோல் தொழிற்சாலையில் தீ

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-கச்சேரி சாலையில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இதில் சுமார் 50- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்ததொழிற்சாலையில் நேற்று திடீரென ஆட்டோ ஸ்பிரே பாய்லரில் தீப்பற்றியது. தொடர்ந்து மேற்கூரைக்கும் தீ பரவியது.

உடனடியாக தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். தீயை அணைக்க முடியாததால் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். 

சீல் வைப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்தனர். தொழிற்சாலை முழுவதும் தீயணைப்பான் கருவி போன்ற உபகரணங்களை சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், ஊரடங்கு உத்தரவை மீறி தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாலும், வாணியம்பாடி தாசில்தார் மோகன் தலைமையில் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

 வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி தனியார் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்