ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,378 பேர் மீது வழக்கு

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,378 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தொடர்ந்து தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

Update: 2021-06-11 17:49 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 2,378 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தொடர்ந்து தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்களில் அதிகம் பேர் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருவதாலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், கூடலூர், தேவாலா ஆகிய 5 உட்கோட்டங்களில் போலீசார் சாலைகளின் குறுக்கே தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றுபவர்கள், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2,378 பேர் மீது வழக்கு

அதன்படி நீலகிரியில் கடந்த மே 24-ந் தேதி முதல் முககவசம் அணியாமல் இருந்த 1,286 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 142 கடைகளுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.75 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 

முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே வாகனங்களில் சுற்றிய 2,378 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கை கடைபிடிக்காமல் வெளியே சுற்றிய 685 இருசக்கர வாகனங்கள், 343 நான்கு சக்கர வாகனங்கள், 5 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

விதிகள் மீறல்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் 14 நாட்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அரசு விதிமுறைகளை மீறி கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியே வந்ததாக இதுவரை 173 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்