திருப்பூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர்
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளதால், மாநகர் பகுதிகளில் லட்சக்கணக்கானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாநகரில் பல பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விடப்படும் நிலை இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் மாநகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இது பலரையும் கவலையடைய செய்துள்ளது. அந்த வகையில் திருப்பூர் கருவம்பாளையம் ஆலங்காடு பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. சிலர் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடங்களில் எடுத்து செல்கிறார்கள். இது குறித்து தகவல் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் பெத்திசெட்டிபுரம் நொய்யல் ஆறு பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.