கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது

தமிழகத்தில், கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2021-06-11 17:30 GMT
திருவெண்காடு:
தமிழகத்தில், கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளை நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், வக்கீல் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், பிரபாகரன், திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சீர்திருத்த நடவடிக்கைகள்
மூன்று பள்ளிகளில் கழிவறை வசதியுடன், கட்டிடங்களை சீரமைக்க ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த ஒரு மாத காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவில் இடங்களில் வசிப்பவர்கள், நில குத்தகைதாரர்களிடம் இருந்து குத்தகை மற்றும் வாடகை வசூல் செய்திட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
துரிதமாக நடந்து வருகிறது
தமிழகத்தில் தொன்மை வாய்ந்த கோவில்களில் திருப்பணி செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. கோவில்களுக்கு தகுதியானவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக நியமனம் செய்யப்படுவர். தமிழகத்தில் கோவில் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்