கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் மூடல்:தாங்களாகவே ஒருவருக்கொருவர் முடி திருத்தி கொண்ட சிறுவர்கள்
கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரூர் பகுதியில் கிராமங்களில் சிறுவர்களே ஒருவருக்கொருவர் முடி திருத்தி கொள்கின்றனர்.
அரூர்:
கொரோனா பரவல்
கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. சலூன் கடைகள் மூலம் எளிதாக கொரோனா தொற்று பரவும் என்பதால் இந்த கடைகள் இயங்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சலூன் கடைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முடி அதிகம் வளர்ந்த நிலையில் தலையில் முடி வெட்டி கொள்ள கடைகளும் இல்லாததால், காத்திருந்த சிறுவர்கள் தாங்களாகவே ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி முடியை திருத்தி கொள்ள தொடங்கி உள்ளனர். இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் சிறுவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்று முடி திருத்தம் செய்து கொள்வதை காண முடிகிறது.
விரும்பிய ஹேர் ஸ்டைல்
அந்த வகையில் அரூர் அருகேயுள்ள பெத்தூர், பாப்பிசெட்டிப்பட்டி, கொளகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், தாங்களாகவே ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி முடி திருத்தம் செய்து கொள்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஊரடங்கும் வளர்ந்து கொண்டே போவதால் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் எங்கள் தலையில் முடியும் வளர்ந்து கொண்டே போகிறது. எனவே, நாங்களே ஒருவர் மற்றொருவருக்கு முடி திருத்தி கொள்ள முடிவு செய்து இந்த செயலில் இறங்கி விட்டோம். தாங்களே முடி திருத்தம் செய்து கொள்வதால், விரும்பிய ஹேர் ஸ்டைலை அமைத்து கொள்ளவும் முடிகிறது. தொடர்ந்து சலூன் கடைகளை திறக்கவில்லை என்றாலும், கிராமங்களில் இளைஞர்களே முடி வெட்டி கொள்கின்றனர். ஆனால் நகர் புறங்களில் உள்ள இளைஞர்கள் சலூன் கடைகளை நம்பியே தாடியுடன் இருந்து வருகின்றனர் என்று கூறினர்.