குற்றங்களை கண்டறிய வனத்துறைக்கு புதிய மோப்ப நாய்கள்
குற்றங்களை கண்டறிய வனத்துறைக்கு புதிய மோப்ப நாய்கள்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு பல்வேறு வனவிலங்குகள், பறவைகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகளை வேட்டையாடுதல், சந்தனம் மற்றும் ஈட்டி மரங்களை வெட்டி கடத்துதல், கஞ்சா பயிரிடுதல் போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி நீலகிரிக்கு சிப்பி பாறை வகையை சேர்ந்த 2 நாய் குட்டிகள் வனத்துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி வன கோட்டத்துக்கு காளிங்கன் என்ற மோப்பநாய், கூடலூர் வன கோட்டத்துக்கு அத்தவை என்ற மோப்பநாய் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த 2 நாய்களுக்கும் வைகை அணை தமிழ்நாடு வன பயிற்சி மையத்தில் 3 மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக வாகனங்களில் சோதனை நடத்துதல், கஞ்சாவை கண்டறிதல், சந்தன மற்றும் ஈட்டி மரங்கள் வாசனைகளை கொண்டு கண்டறிதல், வனவிலங்குகள் வேட்டை போன்றவற்றை கண்டறியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நீலகிரி வன கோட்டத்தில் 13 வனச்சரகங்கள் உள்ளன.
கூடலூர் வனக்கோட்டம் கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டி உள்ளது. வனப்பகுதிகளை பாதுகாப்பதில் மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கும். குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றனர்.