பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 17 பேர் கைது ரூ.1 லட்சம் மதுபானங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 17 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-11 17:21 GMT
புதுப்பேட்டை, 

கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை யாரேனும் கடத்தி வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் உத்தரவின் பேரில், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கள்ளிப்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

அப்போது அந்த வழியாக 5 மோட்டார் சைக்கிள்களில் சிலர் வேகமாக வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் சாக்கு மூட்டைகளை வைத்திருந்தனர். 

அவற்றை வாங்கி பார்த்த போது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியன இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி பண்ருட்டி பகுதிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். 

அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

17 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆனத்தூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 28), சம்பத் (30), பாலு (35), வெங்கடேசன் (36), மருதய்யன் (34), குமாரமங்கலம் தயாநிதி (26), விருத்தாசலம் அகரம் ரஞ்சித்குமார் (23), பண்ருட்டி மணி நகர் நிஜாம் (31), பண்ருட்டி காவனூர் கவுதம் (31), தட்டாஞ்சாவடி செல்வம் (40), கட்டமுத்துப்பாளையம் கணேசன் (40), ஒறையூர் பிரசாந்த் (40), குருநாதன் (27), குமரேசன் (23), வீரப்பார் சரவணன் (23), அங்குசெட்டிப்பாளையம் மருதபாண்டி (24), வீரப்பார் வீரமுத்து (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. 


இதையடுத்து  17 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300  மதுபாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்