தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவில், முத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவில், முத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம், ஜூன்.12-
தாராபுரம்,காங்கேயம்,வெள்ளகோவில், முத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்
பெட்ரோல், டீசல் விலை, கியாஸ் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தாராபுரத்தில் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு தலைமை தாங்கினார். தாராபுரம் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், தாராபுரம், மூலனூர், குண்டடம் ஒன்றியங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல்,கியாஸ் விலையை குறைப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரப்பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கேயம் - திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பண்டுபாய் தலைமையிலும், காங்கேயம்-பழையகோட்டை சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.சரவணன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் கே.எ.சிபகத்துல்லா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அவுட்ரீச் பிரிவு மாநில தலைவர் எஸ்.ஷேக் சாதுல்லா, நகர செயல் தலைவர் பி.கே.ஜி.சேகர், வட்டார தலைவர் சத்தியநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வால் மத்திய அரசை கண்டித்து நேற்று வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் வெள்ளகோவில் வட்டார தலைவர் நடராஜ் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வெள்ளகோவில் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முத்தூர்
திருப்பூர் வடக்கு மாவட்டம் நத்தக்காடையூர் பகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் - டீசல் விலையை கடுமையாக உயர்த்தியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை கடைவீதி பெட்ரோல் பங்க் முன்புறம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவரும், பழையகோட்டை ஊராட்சி கவுன்சிலருமான எம்.செல்வம் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை ஊராட்சி பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை ஏற்படுத்திய மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை திரும்பபெற கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.எஸ்.ராமசாமி, மாவட்ட செயலாளர் ஏ.மோகனகண்ணன், வட்டார துணை தலைவர் ஏ.கதிர்வேல், வட்டார செயலாளர் கோவிந்தசாமி, நத்தக்காடையூர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.சரவணன், பழையகோட்டை கிராம காங்கிரஸ் கமிட்டி ஆர்.செல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலனூர்
மூலனூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர் அம்பாள் சக்திவேல் தலைமையில் மூலனூர் தாராபுரம் சாலையில் உள்ள இந்தியன் பெட்ரோல் பங்க் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி மற்றும் மாவட்ட பொருளாளர் ஜோதிகுமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.