மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மாவட்டத்தில், 190 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கலெக்டர் பாலசுப்ரமணியம் தகவல்

முதல்-அமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மாவட்டத்தில் 190 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

Update: 2021-06-11 17:07 GMT
கடலூர், 

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதிகம் பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 1552 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 850 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகும்.

இது தவிர 18 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 245 படுக்கைகளில் 199 ஆக்சிஜன் படுக்கைகளும், 17 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 3100 படுக்கைகளில், 900 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். 


கொரோனா சிகிச்சை மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். இதற்காக தனியாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தினந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


படுக்கைகள்

நோயாளிகள் வருகையைவிட குணமடைந்து செல்வோர் அதிகமாக இருப்பதால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளன.

மருந்தகங்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றிற்கு மருந்து பெறுவோரின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். 

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் டாக்டர்கள் ஆலோசனை பெறாமல் மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு அது குணமாகாமல் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வரும் போது தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. 

இதை தடுக்க மருந்தகங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு இதுதொடர்பாக உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் தனிமை

கொரோனா பரிசோதனை செய்பவர்கள், அதன் முடிவுகள் வருவதற்குள் வெளியே செல்லக்கூடாது. கண்டிப்பாக 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மற்றவர்களுக்கு நோய் பாதிக்காது.


கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா நோயளிகள் 190 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

மேலும் செய்திகள்