சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் சாவு
சிதம்பரம் அருகே ரெயில் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.;
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த மேல்பூவாணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் கதிர்வேல் (வயது 23). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாழம் சாவடி கிராமத்திற்கு சென்றார்.
அப்போது அந்த கிராமத்தின் வழியாக செல்லும் ரெயில்வே பாதையில் மயிலாடுதுறை-விழுப்புரம் மார்க்கத்தில் ரெயில்வே பணியாளர்களை ஏற்றி செல்லும் சிறப்பு ரெயில் வருகை காரணமாக, அங்குள்ள ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது.
சாவு
இந்த நிலையில் கதிர்வேல் அங்கு காத்திருக்காமல், கேட்டின் கீழ் பகுதிவழியாக நுழைந்து மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சிறப்பு ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், சிதம்பரம் ரெயில்வே போலீசார் நேரில் சென்று கதிர்வேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.