உடுமலை பகுதியில் கீரை சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் பெற முடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை பகுதியில் கீரை சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் பெற முடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-06-11 16:52 GMT
போடிப்பட்டி-
உடுமலை பகுதியில் கீரை சாகுபடி மூலம் கூடுதல் வருவாய் பெற முடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆண்டு முழுவதும் சாகுபடி
உடுமலை பகுதியில் கீரை கிராமம் கிளுவங்காட்டூர் என்று அடையாளப்படுத்துமளவுக்கு இந்த கிராமத்தில் திரும்பிய திசையெல்லாம் கீரை விவசாயம் நடைபெறுகிறது. கிணற்றுப் பாசனத்தில் ஆண்டு முழுவதும் இங்கு கீரை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, சிறுகீரை, சுக்கட்டிக்கீரை, பாலக்கீரை, செங்கீரை, மணத்தக்காளி, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை என இங்கு சாகுபடி செய்யப்படாத கீரைகளே இல்லை என்று சொல்லலாம். தற்போது நாள் முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பலரும் இங்கு வந்து கீரைகளை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தினசரி உணவில் கீரை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வைத் தரும் என்பார்கள். ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு கொரோனாவுக்குப் பிறகுதான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தற்போது நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதும், கூடுதல் சத்துக்கள் கொண்டதுமான உணவு வகைகளை மக்கள் தேடிப் பிடித்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இதனால் கீரைகளின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்து தேவையும் உயர்ந்துள்ளது.
எனவே நாங்கள் படிப்படியாக சாகுபடிப் பரப்பை அதிகரிக்குமளவுக்கு ஏராளமான வியாபாரிகள் தோட்டங்களுக்கே தேடி வந்து கீரைகளை வாங்கிச் செல்கின்றனர். ஊரடங்கால் உழவர் சந்தைகள் மூடப்பட்ட போது எங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறி எழுந்தது. ஏனென்றால் இங்கு அறுவடை செய்யப்படும் கீரைகளில் பெருமளவு உழவர் சந்தை மூலமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாங்கள் பயப்பட்டதற்கு நேர்மாறாக தற்போது முன்பை விட அதிக விற்பனை நடைபெறுவதுடன் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.
உழவர் சந்தை
முன்பெல்லாம் மாலையிலேயே கீரைகளை அறுவடை செய்து கட்டுகளாகக் கட்டி சாக்குப் பைகளில் போட்டு தயார் நிலையில் வைத்திருப்போம்.அதிகாலையிலேயே கீரைக் கட்டுகளை சரக்கு வேன்களில் ஏற்றி உடுமலை உழவர் சந்தைக்கு கொண்டு செல்வோம்.அங்கு சில்லறை வியாபாரிகள் சிலர் வந்து மொத்தமாக கீரைக் கட்டுகளை வாங்கிச்செல்வர். இதுதவிர ஒன்றிரண்டு கட்டுகளாக பொதுமக்களிடம் விற்பனை செய்வோம். சில நாட்களில் ஒருசில கட்டுகள் மீதமானாலும் அதற்காக வாடிக்கையாளரை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதிருக்கும். மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கட்டு கீரை ரூ 10 வரையே விற்பனை செய்வோம். ஆனால் தற்போது தோட்டத்துக்கே வந்து ரூ 10 க்கு மேல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவைக்குத் தகுந்த அளவில் தோட்டத்திலேயே அறுவடை செய்து கொடுப்பதால் வியாபாரிகளுக்கும் புதிதான கீரைகள் கிடைக்கிறது. எங்களுக்கும் ஒரு கட்டு கூட வீணாகாமல் விற்பனை செய்ய முடிவதுடன் கூடுதல் வருவாயும் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது'.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத பொருட்களில் முதலிடத்தில் இருப்பது கீரைகள் என்றாலும் அவற்றை தொடர்ச்சியாக சாகுபடி செய்து அசத்தும் கிளுவங்காட்டூர் விவசாயிகள் பாராட்டுக்குரியவர்களாகும்.

மேலும் செய்திகள்