கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

236 பேருக்கு தொற்று

Update: 2021-06-11 16:47 GMT
கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 24 ஆயிரத்து 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்து 427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 169 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயதுள்ள 2 பெண்கள், 80 வயது முதியவர் மற்றும் செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். எனவே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169-ல் இருந்து 173-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1,260 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில் 236 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 117-ல் இருந்து 24 ஆயிரத்து 353-ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்