நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் தப்பி ஓடிய 4 பேருக்கு வலைவீச்சு
நம்பியூர் அருகே 430 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம், சோளகாடு, பொல்லாங்காடு, தாசையன்காடு ஆகிய பகுதிகளில் சாராய ஊறல் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் நம்பியூர் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு போலீஸ் தங்கதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனன், செல்வம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மேட்டுக்காடு பகுதியில் பெரியபாப்பணன் என்கிற பொங்கியான் என்பவர் 50 லிட்டர் சாராய ஊறலும், பொல்லாங்காடு பகுதியில் ராசம்மாள், வேணுகோபால் ஆகியோர் 280 லிட்டர் சாராய ஊறலும், சின்னபாப்பணன் என்கிற கொளந்தசாமி என்பவர் 100 லிட்டர் சாராய ஊறலும் என மொத்தம் 430 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த சாராய ஊறலையும், சாராய காய்ச்சுவதற்கு தேவையான பொருட்களையும் பறிமுதல் செய்து போலீசார் அழித்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.