தர்ப்பணம் கொடுக்க சேதுக்கரையில் குவிந்த மக்கள்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சேதுக்கரையில் அமாவாசையான நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

Update: 2021-06-10 14:55 GMT
ராமநாதபுரம், 
கொரோனாவால் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சேதுக்கரையில் அமாவாசையான நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
ஊரடங்கு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி அதனால் பலர் பலியாகி வருகின்றனர். இதன்காரணமாக அரசு தளர்வுகளுடனும், தளர்வுகள் இல்லாமலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது இருந்ததை விட இந்த ஆண்டு 2-வது பரவலின்போது ஏராளமானோர் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். தெருக்களிலும், ஊர்களிலும் அக்கம்பக்கத்திலும் யார் இறந்தாலும் கொரோனாதான் காரணமாக இருந்தது. 
அந்த அளவிற்கு கொரோனா தொற்றால் பலர் பலியாகி உள்ளனர். இவ்வாறு பலியானவர்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமே இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மின் மயானத்தில் எரியூட்டி சாம்பல் மட்டும் குடும்பத்தினரிடம் வழங்கப் பட்டு வந்தது. இறுதி சடங்கினை கூட செய்ய முடியாமல் தவித்து வந்த குடும்பத்தினர் இறந்தவர்களுக்கு முறையான காரியங்களை கடற்கரையில் செய்ய முடியாமல் வேதனை அடைந்து வந்தனர்.
அமாவாசை 

ஊரடங்கு காரணமாக கடற்கரை பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக இறந்தவர்களுக்கு உரிய காலத்திற்குள் அதற்குரிய காரியங்களை செய்ய முடியாமல் அதனால் குடும்பத்திற்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கடும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு சற்று தளர்வுகளுடன் ஊரடங்கினை அறிவித்துள்ளதால் நேற்று அமாவாசை தினத்தில் சேதுக்கரை கடற்கரையில் காலையிலேயே மக்கள் திரண்டு வந்தனர்.
கடற்கரைக்கு செல்லக்கூடாது என்று அறிவித்திருந்த போதிலும் கொரோனாவால் இறந்தவர்களின் அஸ்தியை இனியும் வீடுகளில் வைத்திருக்கக்கூடாது என்று கருதி அஸ்தியுடன் சேதுக்கரை கடற்கரைக்கு வந்து குவிந்தனர். 
அபராதம்

அங்கு தங்கள் குடும்பத்தில் கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உரிய காரியங்களை செய்தனர்.  கொரோனாவால் இறந்தவர்கள் தவிர கடந்த 2 மாதங்களாக தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களின் நினைவாக கடற்கரைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து தங்களின் கடமையை நிறைவேற்றினர். தடையை மீறி இவ்வாறு வந்தவர்களுக்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அபராதம் விதித்த போதும் அதனை பற்றி கவலைப்படாமல் தங்களின் கடமையை செய்வதில் உறுதியாக வந்திருப்பதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்