சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? சேலத்தில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்

சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? என சேலத்தில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-09 21:10 GMT
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு, வீடாக மாநகராட்சி ஊழியர்கள் சென்று காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக மாநகராட்சி நிர்வாகம் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அதாவது, ஒருவர் தினமும் 100 வீடுகளை கண்காணித்து அதில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்தும், வீட்டில் இருப்பவர்களிடம் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு போன்றவை குறித்தும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் மாநகராட்சி முழுவதும் எத்தனை பேர் காய்ச்சல், சளி, இருமல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விவரம் தெரியவரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்