பலத்த மழை காரணமாக மின்கசிவு: மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி சாவு

சிட்லபாக்கத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார்.

Update: 2021-06-09 01:14 GMT
தாம்பரம்,

சிட்லபாக்கம், அண்ணா நகரில் உள்ள புறநானூறு தெருவைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 45). இவரது மகள் சஞ்சனா (13). 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், சசிகலா வீட்டின் மேற்புறத்தில் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளக்கு மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டின் மாடிக்குச் சென்ற சஞ்சனா இதை அறியாமல் மின்கம்பியின் குழாயை தொட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.

சாவு

இதற்கிடையே சிறுமி நீண்ட நேரமாகியும் வராததால், தேடிச்சென்ற அவரது தம்பி சித்தரஞ்சன், சஞ்சனா சுயநினைவின்றி கிடப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, சஞ்சனாவை அவரது உறவினர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்