கொடுமுடி அருகே சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்: அதிகாரிகளிடம் சிக்கியதும் செம்மண் கடத்தல் லாரியை கவிழ்த்து தப்பிய டிரைவர்- போலீஸ் தீவிர விசாரணை
கொடுமுடி அருகே சினிமாவை மிஞ்சுவதுபோல், அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதும் செம்மண் கடத்தல் லாரியை கவிழ்த்து டிரைவர் ஒருவர் தப்பி ஓடிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
கொடுமுடி
கொடுமுடி அருகே சினிமாவை மிஞ்சுவதுபோல், அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டதும் செம்மண் கடத்தல் லாரியை கவிழ்த்து டிரைவர் ஒருவர் தப்பி ஓடிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்மண் கடத்தல்
கொடுமுடி அருகே உள்ள தாமரைப்பாளையம் வழியாக லாரியில் செம்மண் கடத்தி செல்வதாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ஈரோடு சுரங்க இணை இயக்குனர் சத்தியசீலன், புவியியலாளர் ஜெகதீஷ், சுரங்க சிறப்பு ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை 6 மணி அளவில் தாமரைப்பாளையத்தில் ஈரோடு செல்லும் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.
மடக்கி பிடித்தனர்
சுமார் 7 மணி அளவில் ஈரோடு பகுதியில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. உடனே அதிகாரிகள் அந்த லாரியை மடக்கி பிடித்தார்கள். லாரியை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் அதிகாரி சிலம்பரசன் அந்த லாரியில் ஏறிக்கொண்டு டிரைவரின் அருகே அமர்ந்து, கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு லாரியை ஓட்டிச்செல்ல கூறினார். அதன்படி டிரைவரும் லாரியை ஓட்டினார். மற்ற அதிகாரிகள் லாரியின் முன்னால் ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தார்கள். லாரி ஓட்டியபடியே டிரைவர் தன்னுடைய செல்போனில் யாரையோ அழைத்து அதிகாரிகள் தன்னை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து செல்வதாக கூறினார்.
பள்ளத்தில் கவிழ்த்தார்
இந்தநிலையில் லாரி சிறிது தூரம் சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்தார். அதிகாரி சிலம்பரசன் லாரி டிரைவரிடம் இவர் யார்? என்று கேட்டார். அதற்கு அவர், இவர்தான் எங்கள் கம்பெனியின் மேனேஜர் என்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்தவர் சிலம்பரசனிடம் லாரியை தான் ஓட்டிவருவதாக கூறி, ஏற்கனவே ஓட்டிவந்த டிரைவரை லாரியில் இருந்து கீழே இறங்க சொன்னார். பின்னர் அவர் லாரியை ஓட்டிச்சென்றார்.
கொடுமுடி அருகே காங்கேயம் சாலையில் தொலைபேசி அலுவலகம் அருகே சென்றபோது திடீரென லாரியை அவர் இடதுபுறமாக திருப்பி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்த்தார்.
தப்பி ஓடினார்
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபரீதத்தால், லாரிக்குள் இருந்த சிலம்பரசன் அதிர்ந்து அலற, ஜீப்பில் முன்னால் சென்றுகொண்டு இருந்த மற்ற அதிகாரிகள் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தார்கள். அதற்குள் லாரியை கவிழ்த்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அதிகாரிகள் சட்டையை பிடித்து அவரை நிறுத்தினார்கள்.
ஆனால் அவர் தன்னுடைய சட்டையை கிழித்துபோட்டுவிட்டு அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். லாரிக்குள் இருந்த சிலம்பரசன் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார்.
பரபரப்பு
இதுபற்றி உடனே கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்த சிலம்பரசனை கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்மண் கடத்திய லாரி யாருடையது?, அதை ஓட்டி வந்தவர் யார்?, லாரியை கவிழ்த்து தப்பி சென்ற டிரைவர் யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் கொடுமுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.