பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்டத்தில் 42 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் 42 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-08 21:02 GMT
சேலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் 42 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மேலும் அதன் மீதான மத்திய அரசு விதிக்கும் வரியை குறைத்து பெட்ரோல் ரூ.50-க்கும், டீசல் ரூ.40-க்கும் விற்பனை செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது. மேலும், செங்கல்பட்டு எச்.எல்.எல். தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்தை மாநில அரசு கோரியவாறு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த கட்சி சார்பில் சேலம் மாவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மாநகரில் கொண்டலாம்பட்டி உள்பட 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் உள்பட 8 இடங்களில் நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளரும், நங்கவள்ளி முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான பழ. ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் நடராஜ், சின்னதம்பி, கிருஷ்ணன், வேம்பன், அருணாச்சலம், சதீஷ் ராஜா, கோகுலகிருஷ்ணன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்டத்தில் மல்லூர், தேவூர், ஆத்தூர், கருமலைக்கூடல் உள்பட 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்டத்தில் மொத்தம் 42 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு போலீஸ் அனுமதி கிடையாது என்பதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்